புதுடெல்லி: இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள், பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது அதிகரித்து வருகிறது. இன்டர்போல் உதவியுடன் அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு நீதியின் முன்பு நிறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகள் குறித்து இன்டர்போல் உதவியுடன் சிவப்பு நோட்டீஸ் வெளியிடப்படுகிறது. இதன்படி 195 நாடுகளில் குற்றவாளிகள் தீவிரமாக தேடப்படுவார்கள். எந்த நாட்டில் குற்றவாளிகள் பதுங்கி உள்ளனர் என்பது இன்டர்போல் உதவியுடன் கண்டுபிடிக்கப்படும். இதன்பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இந்தியாவுக்கு நாடு கடத்த சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நாடுகளில் பதுங்கி இருந்த 134 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் நீரவ் மோடி கடந்த 2019-ம் ஆண்டில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதே வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடியின் தம்பி நேகல் மோடி அண்மையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 65 பேர் அமெரிக்காவில் பதுங்கி உள்ளனர். அவர்களை கைது செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசிடம் கோரப்பட்டு உள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் இந்தியாவுடன் இணக்கமாக செயல்படுகின்றன. அந்த நாடுகளில் இருந்து ஏராளமான குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.