சென்னை: ‘தமிழகத்தில் ஆசிரியர்கள் எப்போ தெல்லாம் போராட்டம் நடத்தியிருக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னையில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10-வது நாளான நேற்று டிபிஐ வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீஸார் கைது செய்து திருவல்லிக்கேணியில் உள்ள சமூகநலக்கூடத்தில் அடைத்து வைத்தனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சமூக கூடத்துக்கு வந்தனர். ஆனால், அவர்களுக்கு போலீஸார் அனுமதி தரவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீமான் கூறும்போது, ‘‘வீடு தேடி சேவை என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், மக்கள் சாலைக்கு வந்து போராடும் நிலையே உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின்தான் முதல் எதிரி. எனவே, ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதை நிறைவேற்றச் சொல்வது ஆசிரியர்களின் உரிமை. அந்த வகையில், உரிமைக்காகப் போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் 250 பேரும், தூத்துக்குடியில் 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டனத்துக்குரியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது பெண் குழந்தையை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை. அதேபோல், மயிலாடுதுறையில் 23 பார்களை சீல் வைத்ததற்காக டிஎஸ்பி-யின் அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஆனால், உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்களை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆதிதிராவிடர் பள்ளிகளில் 30 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஆனால், தமிழக முதல்வர் ஓரணியில் திரளுவோம் என ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறார். ஆசிரியர்கள் எப்போதெல்லாம் அரசை எதிர்த்து போராடுகிறார்களோ, அப்போதெல்லாம் அந்த அரசு வீழ்ந்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் வரும். அதன்பிறகு நிச்சயம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.