மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயரையும் விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், துணையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
ரூ.150 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதால் விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். இல்லாவிட்டால் ஜூலை 8-ல் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்தோம், இந்நிலையில், தமிழக முதல்வர் ஜூலை 7-ம் தேதி 5 மண்டலத் தலைவர்கள், வரி விதிப்புக் குழு தலைவர், நகரமைப்புக் குழு தலைவர் ஆகியோரின் பதவியை பறித்தார். இது எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
ஆனால், வழக்கு முறையாக நடக்கவில்லை. சாதாரண பொறுப்பிலுள்ள பில் கலெக்டர், பகுதி நேர ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது கண் துடைப்பு நாடகம் போல் தெரிகிறது. உண்மையை கண்டறிந்து நீதியை வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவின் பேரில் அதிமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து 8 மாதமாக கிடப்பில் போட்டனர். தற்போது பில் கலெக்டர், ஒப்பந்த பணியாளர்களை மட்டும் கைது செய்துள்ளனர். முறையாக விசாரணை நடத்தவும், ஊழலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் மேற்பார்வையில் தென் மண்டல ஐஜி தலைமையில் விசாரணை குழு அமைக்கப் பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த ஊழல் முறைகேட்டில் மத்திய மண்டலத்தில் கணினி பிரிவில் இருந்த ரவி என்பவருக்கு முக்கிய பங்குள்ளது. அவர் இரவோடு இரவாக ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் துணைவியார் மேயரின் உதவியாளராக இருந்துள்ளார். எனவே, ரவியை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்க வேண்டும். மாநகராட்சியில் மேயருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. எனவே, மேயரிடமும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் மண்டலத் தலைவர்களின் பினாமி பெயரில் சொத்து குவித்ததையும் கணக்கெடுக்க வேண்டும்” என்று செல்லூர் ராஜூ கூறினார்.