திண்டிவனம்: விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று (ஜூலை 17) அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் மழை பொழிவு அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. தமிழக நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் குறுக்கே உள்ள ஷட்டர் உள்ளிட்டவை பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் மழை பொழியும்போது பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும். தென்பெண்ணையாறு, தாமிரபரணி ஆற்றின் கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இதே நிலை உள்ளது. 36 மாவட்டங்களில் உள்ள 149 பாசன கட்டமைப்பை மறுசீரமைக்க, நீர்வளத் துறைக்கு ரூ.1,000 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்.
திருப்புவனத்தில் இளைஞர் மரணம் மற்றும் சென்னையில் 97 பவுன் நகை திருடு போன வழக்கை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட சூளைமேடு காவல் துறையினரை நீதித்துறை எச்சரித்துள்ளது. 2008-ம் ஆண்டு முதல், தற்போது வரை சூளைமேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனம் மற்றும் உடல் பயிற்சியை காவல் துறைக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும். அதன்பிறகும் தவறு இழைக்கின்றனர் என்றால், காவல்துறை பணிக்கு தேவையில்லை.
கும்மிடிபூண்டி முதல் சென்னை வரை கூடுதல் எண்ணிக்கையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும். மொழி தெரிந்த நபர்களை பணியில் அமர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூரில் எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்த விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட, அப்பகுதி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்த 3 வயது சிறுமி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார். காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை, 6 மாதத்துக்கு முன்பு தொடங்கி இருக்க வேண்டும். மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், முகாமில் மக்கள் கூட்டம் அதிகளவு இருக்கிறது.
மருத்துவ தினத்தில் ஆளுநர் ரவி வழங்கிய கேடயத்தில் இடம்பெற்றிருந்த திருக்குறள், 1331-வது குறளாகும். நல்ல வேடிக்கை. பூம்புகார் மகளிர் மாநாட்டுக்கு அன்புமணி வருவார், வரலாம். அன்புமணி நடத்தும் போராட்டத்தில் எனது சார்பாக யார் கலந்துகொள்வார்கள் என போகப் போக தெரியும். அன்புமணி நடத்தும் இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். நல்ல காரியம் செய்தால் வாழ்த்துகள்” என்றார்.
ஊடகத் துறையினர் மீது குற்றச்சாட்டு: எனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது யார், கருவிக்கு சார்ஜ் போட்டவர் யார் என்பதெல்லாம் இரண்டு, மூன்று நாட்களில் வெளிச்சத்துக்கு வரும் என்ற ராமதாஸிடம், யார் மீது சந்தேகம் உள்ளது என்ற கேள்விக்கு, “உங்கள் (ஊடகத்துறையினர்) மீதும் சந்தேகம் உள்ளது. ஏன்? அது நீங்களாக இருக்கக் கூடாது. காவல் துறையினர் 8 பேர் வந்து, முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். சைபர் க்ரைம் என்பது சைபராகி, மைனசாகிவிட்டது. சைபர் க்ரைம் என ஒன்று உள்ளதா?” என்றார். ஒட்டுகேட்பு கருவி விவகாரத்தில் ஊடகத் துறையினர் மீதான ராமதாஸின் குற்றச்சாட்டு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.