புதுடெல்லி: சத்தீஸ்கரில் 35 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேச தம்பதியினர், இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பிஎஸ்எப், வடக்கு வங்காள எல்லைப் பகுதிக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டம் சாக்கோபால் என்ற கிராமத்துக்கு அருகில் வேலி இடப்படாத சர்வதேச எல்லையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற ஜைனப் என்ற பெண் பிடிபட்டார். விசாரணையில் வங்க தேசத்தை சேர்ந்த அவர் தனது கணவர் ஷேக் இம்ரானுடன் கடந்த 1990-ல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரியவந்தது.
மேலும் விசாரணையின் விளைவாக, ஹில்லி சோதனைச் சாவடி வழியாக வங்கதேசம் சென்ற அவரது கணவர் பிஎஸ்எப் முன் சரண் அடைவதற்காக திரும்பி வந்துள்ளார். இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தினரை அடையாளம் காணும் பணி சத்தீஸ்கரில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். இவ்வாறு பிஎஸ்எப் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
மேற்கு வங்க போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த தம்பதியினர் பின்னர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆதார், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஆர்.சி. புத்தகம், இந்திய பாஸ்போர்ட் மற்றும் மொபைல் போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். வங்கதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு நிரந்தரமாக திரும்புவதே இந்த தம்பதியின் நோக்கம் என போலீஸார் கூறினர்.