திருச்சி: நாம் தமிழர் கட்சி சார்பில் ஆக.17-ம் தேதி மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 2018-ல் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: விவசாயிகள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து, திமுக அரசு எவ்விதத்திலும் மாறுபடவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கலாமா? மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் திமுக, மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதில்லை.
ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக இணைத் துள்ளதாக கூறும் திமுக, வாக்குக்கு பணம் கொடுக்காமல் இருக்குமா? தமிழகத்தை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும் என கருணாநிதியிடம் காமராஜர் சொன்னதாக, திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார். கருணாநிதி கையில் நாட்டைக் கொடுப்போம் என்று காமராஜர் எப்போது சொன்னார்? ஆடு, மாடு இல்லாமல் மண் வளம் பெறாது. அதனால்தான் கால்நடை மாநாடு நடத்தினேன். அடுத்ததாக ஆக.17-ம் தேதி கட்சி சார்பில் 10 ஆயிரம் மரங்களுக்கு மத்தியில் மாநாடு நடைபெறும். இவ்வாறு சீமான் கூறினார்.