வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டியிருக்கும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால், ரஷ்யா அதிபர் புதின், உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது. ட்ரம்ப்பை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இதனால் அடுத்த 50 நாட்களுக்குள் செக்ரைனுடன் சண்டை நிறுத்தம் சண்டை நிறுத்தம் செய்யவில்லை என்றால், ரஷ்யாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட், அமெரிக்க செனட் உறுப்பினர்களை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. 50 நாட்களுக்குள் ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அந்நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மேலும், 50 நாட்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், அடுத்ததாக ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் 100 சதவீத வரி விதிப்பை சந்திக்க நேரிடலாம். எனவே, இந்நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புதினிடம், உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை, அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் மிகப் பெரிய அளவில் சந்திக்க நேரிடும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, உக்ரைனுக்குத் தேவையான தொலைதூர ஏவுகணைகள் உட்பட அனைத்து வகை ஆயுதங்களையும் அமெரிக்கா விநியோகிக்கும். இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகனுடன் ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு மார்க் ரூட் கூறினார்.
இந்தியாவுக்கு பாதிப்பு? – இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்தள்ளது. முன்பு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் அதிக அளவில் வாங்கப்பட்டது.
ஆனால் ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த 2022-ல் போர் தொடுத்ததும், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும் நிறுத்தின.
அதனால், சீனா, இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விநியோகிக்க ரஷ்யா முன்வந்தது. சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலையைவிட பீப்பாய்க்கு 5 அமெரிக்க டாலர் குறைவாக ரஷ்யா விநியோகித்தது.
40% ரஷ்யாவில் இருந்து… கடந்த 3 ஆண்டுகளாக, இந்தியாவுக்கு ரஷ்யா அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதம் ரஷ்யாவில் இருந்து வருகிறது. இதேபோல, சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்கு மதி செய்கிறது.
இந்தியா மற்றும் சீனா மீதான அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்தால், இரு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்படும்.