திருச்சி: ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள்’ என்று காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கூறினார். திருச்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் அரசியல் அமைப்பை காப்போம் விளக்க பொதுக் கூட்டம் மணப்பாறையில் நேற்று தினம் இரவு நடைபெற்றது.
இதில் திருச்சி வேலுச்சாமி பேசியதாவது: தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது 1954-ல் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை அறநிலையத் துறை அமைச்சராக்கி வரலாறு படைத்தார். தமிழகத்தின் முடிசூடாமன்னனாக முதல்வராக இருந்தவர் காமராஜர். இரு இந்தியப் பிரதமர்களை உருவாக்கியவர்.
ஆனால், அவர் உயிரிழக்கும்போது 100 ரூபாய் கூட அவரிடம் இல்லை. அவரைத்தான் வரலாறு பேசுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, அசாமில் இருந்து குஜராத்வரை குறுக்கும் நெடுக்குமாக தன்பாதத்தாலேயே அழகு பார்த்த ராகுல்காந்தியை பிரதமராக்கினால் நமது வாழ்க்கை பாதுகாக்கப்படும். தமிழகத்தில் காங்கிரஸும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான் நமது குறிக்கோள்.
இதற்கு முன்னர் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கவுரவத்துக்கு இழுக்கு வராத நிலையில் நமது கூட்டணி இருக்கும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள். முதலில் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம். பிறகு மத்தியில் ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன் மற்றும் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும் என ஏற்கெனவே மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியான திருச்சி வேலுச்சாமியும், அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.