சென்னை: விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மின்ட் தெருவில் வேத விநாயகர் கோயில் உள்ளது. கடந்த 1954-ம் ஆண்டும் தெய்வயாணை என்பவர் அறக்கட்டளை ஆரம்பித்து, மின்ட் தெருவில் அவருக்கு சொந்தமான இடத்தில் இந்தக் கோயிலை கட்டி நிர்வகித்து வந்தார். இந்நிலையில், அவர் காலத்துக்கு பிறகு கோயிலை பராமரிப்பதற்காக மகாலிங்கம் என்பவரை நியமித்தார். ஆனால், மகாலிங்கம் வயதான காரணத்தால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கோயில் பராமரிப்பு பொறுப்பை இந்திரகுமார் என்பவரிடம் ஒப்படைத்தார்.
மகாலிங்கம் காலத்துக்கு பிறகு, இந்திரகுமார் என்பவர் கோயிலை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. கோயிலை சுற்றி வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்தது. மேலும், அப்பகுதி மக்களும் விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த கோயில் சுற்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழடைந்ததாக கூறி இந்திரகுமார், கட்டிடங்களை இடிப்பதற்கு முயற்சி செய்வதாகவும், கட்டிடங்களோடு சேர்ந்து, கோயிலையும் இடிக்க முயற்சிப்பதாகவும் இந்து முன்னணி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கோயிலையும், கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் நேற்று இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீஸார் அவர்களை கைது செய்தனர்.