புதுடெல்லி: முன்னாள் தடகள வீரரும், உலக சாம்பியனுமான உசைன் போல்ட் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், உசைன் போல்ட் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறார். செப்டம்பர் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை டெல்லி, மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறும்போது, “இந்தியாவுக்கு செல்வதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறேன். இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்” என்றார்.
உசைன் போல்ட் இந்தியாவுக்கு 2-வது முறையாக வரவுள்ளார். அவர், ஏற்கெனவே 2014-ம் ஆண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற காட்சி கிரிக்கெட் போட்டியை அவர் தொடங்கி வைத்திருந்தார்.