சென்னை: மதத்தை வைத்து விஜய்யின் தாயை பற்றி விமர்சனம் செய்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு-வுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், “அன்று துப்பறிவாளர் ஹெச்.ராஜா செய்த வேலையை இன்று சட்டப்பேரவைத் தலைவர் செய்வது சரியா?” என்று வினவியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “விஜய்யின் அம்மா கிறிஸ்தவர். தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான். சிறுபான்மையினர்களின் வாக்கை உடைக்கத்தான் அவரை பாஜக இறக்கியிருக்கிறது.” என கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ‘சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அனைவருக்குமான பேரவைத் தலைவராக இல்லாமல் திமுக பேச்சாளராகவே செயல்படுவது வழக்கம். ஆனால் இன்னும் கீழிறங்கி நம் வெற்றித் தலைவர் விஷயத்தில் பேரலை சேனல் சிறார்கள் போல் கட்டுக்கதைகளை எல்லாம் சொல்வது தகுமா?
பேரவைத் தலைவரே, அந்தத் தனி விமானம் எங்கு நிற்கிறது? துபாய் மெயின் ரோட்டிலா? பரந்தூரிலா? வாட்ஸ் அப் புரட்டுகளை வாத்தியார் பரப்பலாமா? தனி விமானப் பொய்கள் இருக்கட்டும், தனியார் நிறுவனம் மூலம் பாஜகவுக்கு திமுக பல உதவிகள் செய்வதாகப் பேச்சு அடிபடுகிறதே?
தாயின் மதம் குறித்தெல்லாம் பேசி, தங்களை திமுக கரை வேட்டி கட்டிய முழு சங்கி என்ற உண்மையை வெளிப்படுத்தலாமா? விஜய்யின் தாயார் இந்து மதத்தை சார்த்தவர். அப்படி கிறிஸ்தவராகவே இருந்தாலும் கூட அதில் என்ன தவறு? மனிதரை மனிதராகப் பாராமல் கிறிஸ்தவராகப் பிரித்துப் பார்ப்பது சிறுபான்மை விரோதச் சிந்தனை அல்லவா? அன்று துப்பறிவாளர் ஹெச்.ராஜா செய்த வேலையை இன்று சட்டப்பேரவைத் தலைவர் செய்வது சரியா? பேரவையில் மற்றவர்களைப் பேச விடாமல் தடுக்கலாம். மக்கள் சக்தியை உங்களால் ஒரு போதும் தடுக்க முடியாது’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.