லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், கருண் நாயர் ஆட்டமிழந்த போதே இங்கிலாந்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதையடுத்து கடந்த வாரம் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து, இந்திய அணிகள் தலா 387 ரன்கள் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 192 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:
இந்தத் தொடரில் இங்கிலாந்தில் இந்திய வீரர்களின் பேட்டிங் பாராட்டுக்குரியதாக உள்ளது. குறிப்பாக 2-வது டெஸ்டில் ஷுப்மன் கில் உள்ளிட்டோர் அபாரமாக விளையாடினர். 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு இருந்தது.
இந்தப் போட்டியில் திருப்புமுனையே ரிஷப் பந்த்தின் விக்கெட் தான். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பந்த்தை ரன் அவுட் முறையில் அவுட்டாக்கினார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ரிஷப் பந்த் அப்போது 74 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தார்.
சூழ்நிலையை மனதில் வைத்து, ரிஷப் பந்த் ரன் எடுக்க ஓடும் முனையை நோக்கி பந்தை எறிந்து அவுட்டாக்கினார். இதனால் இந்திய அணியின் ரன் குவிப்பு தடுக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸில் கருண் நாயர், ரிஷப் பந்த் ஆகியோர் அவுட்டானதும் இங்கிலாந்தின் வெற்றிக்கு வாசல் திறக்கப்பட்டு விட்டது.
இந்தத் தொடரில் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மீண்டு வந்து வெற்றி பெற்றால், ஓவல் மைதானத்தில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டி மிகவும் திரில்லிங்காக இருக்கும். இந்தத் தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நான் சொல்வேன்.
இந்தத் தொடரில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதற்காக இங்கிலாந்து அணியை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும். அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார் பென் ஸ்டோக்ஸ். இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.