Anime பெண் அவதார்களை பிரதிபலிக்கும் வகையிலான ஏஐ அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி வரை சம்பளம் தர தயார் என எலான் மஸ்க்கின் செயற்கை மென்பொருள் நிறுவனமான எக்ஸ் ஏஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு அந்நிறுவனத்தின் வலைதளத்தில் ‘கேரியர்’ பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. ‘Fullstack Engineer – Waifus’ என்ற டைட்டிலின் கீழ் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இது குறித்த தகவலை வணிக செய்திகளை வெளியிட்டு வரும் ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. Waifu என்ற சொல்லை அனிமி ரசிகர்கள் பெண் பாத்திரங்களை குறிப்பிட பயன்படுத்துவது வழக்கம்.
எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் Grok ஏஐ சாட்பாட்டில் இந்த அவதார் இடம்பெறும் என தெரிகிறது. இது குறித்து மஸ்க் உறுதி செய்துள்ளார். இப்போதைக்கு இது சாஃப்ட் லான்ச்சில் இருப்பதாகவும். விரைவில் சந்தா செலுத்தும் பயனர்களின் பயன்பாட்டுக்கு இது கிடைக்கும் என தகவல்.
அண்மையில் Grok ஐஓஎஸ் செயலியில் இரண்டு அனிமே ஏஐ கம்பேனியன்களை எக்ஸ் ஏஐ அறிமுகம் செய்தது. ‘Ani’ மற்றும் ‘Rudi’ என்ற பெயரில் இது அறியப்படுகிறது. இதோடு சேர்த்து மூன்றாவதாக மற்றொரு அனிமே ஏஐ கம்பேனியனை அறிமுகம் செய்யவும் எக்ஸ் ஏஐ திட்டமிட்டுள்ளது. இப்போதைக்கு இது ப்ரீமியம் பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் அனிமே பெண் அவதார்களை வடிவமைக்கும் மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.3.7 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என எக்ஸ் ஏஐ தெரிவித்துள்ளது. மல்டிமீடியா சிஸ்டம்ஸ் மற்றும் ப்ராடக்ட் டெவலெப்மென்ட் சார்ந்து அனுபவம் உள்ள பொறியாளர்கள் இந்த பணிக்கு தேவை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலைக்கான பணியிடம் கலிபோர்னியா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்த முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது. குறிப்பாக இந்த ஏஐ கம்பேனியன்களுடன் பயனர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சாட் செய்யலாம் என தெரிகிறது. இருப்பினும் இது டெக் வல்லுநர்கள் மத்தியில் விவாதப் பொருளாகி உள்ளது.