கடலூர்: “அதிமுக அரசு அமைந்தவுடன் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக செயல்படுத்துவோம்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சிதம்பரம் தனியார் ஓட்டலில் இன்று (ஜூலை 16) காலை 12 மணி அளவில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் பகுதி விவசாயிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசி, கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பல்வேறு இன்னல்களையும் பட்டியலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் முதல்வராக இருந்த காலம் சோதனைக் காலம் அப்போதுதான் கஜா புயல் புரட்டிப் போட்டது. அதில் புயலாக மாறி பணியாற்றினோம் அதன் பின்னர் கரோனா உள்ளிட்ட பல்வேறு கால கட்டங்களிலும் கூட பல மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வந்தோம்.
அதிமுக ஆட்சியில் தான் மழை நீர் கடலில் கலக்காதவாறு தடுப்பணைகளை கொண்டு வந்தோம். கடலூர் – மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இடையே ஆதனூர்- குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதுவரை திமுக அரசு அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீர் மேலாண்மைக்கு தனி துறையை உருவாக்குவேன்.
என்எல்சி பங்குகள் தனியாருக்கு விற்கும் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் என்எல்சி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்தப் பங்குகளை தமிழக அரசு மூலம் வாங்கி என்எல்சி ஊழியர்களை காப்பாற்றினார்.
இங்கு வந்துள்ள விவசாயிகள் வேளாண் துறையை பற்றி அவ்வளவு குறை கூறுகிறார்கள். இதே ஊரைச் சேர்ந்த வேளாண்துறை அமைச்சர், அமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர். சொந்த ஊரில் கூட அவரால் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை செய்ய முடியாதராக உள்ளார்.
அதிமுக ஆட்சியில் பருத்தி, கரும்பு அபிவிருத்தி திட்டத்தை நிறைவேற்றினோம். அதனை திமுகவினர் ரத்து செய்து விட்டனர்.
விவசாயத் துறை அமைச்சர் கொடுக்கும் பட்டியலுக்கு தான் மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் உழவன் செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தற்போது உழவன் செயலி முறையாக செயல்படுத்தவில்லை.
காவிரி நதி நீர் இங்கு வரை வந்து கடலில் கலக்கிறது. அந்த நதி நீர் மாசடையக்கூடாது என்பதற்காக நான் முதல்வராக இருந்தபோது விரிவான ஒரு திட்டத்தை தயார் செய்து பிரதமரிடம் வழங்கினேன். அதனை ஏற்றுக்கொண்டு தற்போது மத்திய அரசு ‘நடந்தாய் வாழி காவிரி’ என திட்டத்தை உருவாக்கி மாநில அரசுக்கு ரூ.11 ஆயிரத்து 500 கோடி வழங்கியுள்ளது. இதனை தர மாட்டார்கள் என சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் கிண்டல் செய்தார். ஆனால் தற்போது வழங்கியுள்ளார்கள்.
சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.1,020 கோடியில் கால்நடை ஆராய்ச்சி நிலைய பூங்கா ஆயிரம் ஏக்கரில் அமைத்தேன். இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா. இதில் அமைக்கப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரியை மட்டும் நான் திறந்து வைத்தேன். அதன் பிறகு எதையுமே திமுக அரசு செய்யவில்லை.
இதேபோல் அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை. எனவே அதிமுக அரசு அமைந்தவுடன் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நலத் திட்டங்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக செயல்படுத்துவோம்.” என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், செல்வி ராமஜெயம், எம்எல்ஏ-க்கள் சிதம்பரம் தொகுதி பாண்டியன், புவனகிரி தொகுதி அருள்மொழி தேவன், முன்னாள் எம்எல்ஏ முருகு மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.