சென்னை: சட்டவிரோத மணல் விற்பனையால் அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிண்டியில் உள்ள சுரங்கத்துறை இயக்குநரிடம் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், கரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சட்ட விரோத குவாரிகள் செயல்படுகின்றன.
இங்கு லாரிகளில் அதிக பாரத்தை ஏற்றி விடுகின்றனர். மேலும் குறைந்த தூரத்தில் இறக்க வேண்டிய மணலுக்கு அதிக தூரத்தை குறிப்பிட்டு முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். ஒரு ஆன்லைன் நடைச்சீட்டை பயன்படுத்தி பல முறை பயணிக்க அனுமதித்து அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர்.
இதற்கிடையே ஒரு நபர் குவாரிகளில் ராயல்டி செய்யும் ஒப்பந்தத்தை அரசிடம் இருந்து பெற்றதாகக் கூறி, உரிமையாளர்களை அச்சுறுத்தி ஒரு யூனிட்டுக்கு ரூ.700 வசூலிக்கிறார்.
குவாரிகளில் சவுடுமண் எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு ஜிஎஸ்டி, விற்பனை வரி ரசீது கொடுக்காமல் நடைச்சீட்டு மட்டுமே கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. மக்களுக்கு சரியான விலையில் மணல் கிடைப்பதில்லை. இந்த விவகாரத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை தவறிழைத்த அதிகாரிகளிடம் இருந்தே வசூலிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.