திருச்சியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்திக்கொள்கிறது.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பிரதான அடையாளமாக திகழ்ந்தது மத்திய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்துக்கு, சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து நாள்தோறும் 1,516 புறநகர் பேருந்துகள் 2,893 முறை வந்து சென்றன. இப்பேருந்து நிலையத்தில் இருந்து 750 மீ. தொலைவில் திருச்சி ரயில்வே சந்திப்பும், 5 கி.மீ. தொலைவில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது சிறப்புக்குரியது. இதனால், 24 மணிநேரமும் பரபரப்பாக இயங்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகளை கையாண்டது.
1966-ம் ஆண்டு ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, மத்திய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வராக இருந்த பக்வத்சலம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார். இதனால், மத்திய பேருந்து நிலையம் ‘ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை பேருந்து நிலையம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் காலத்தில், மத்திய பேருந்து நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 4.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள மத்திய பேருந்து நிலையம் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க 53 ஆண்டுகள் பழமையான மத்திய பேருந்து நிலையம் இன்றுடன்(ஜூலை 16) தனது வெளியூர் பேருந்துகள் இயக்க சேவையை நிறுத்திக்கொள்கிறது. வெளியூர் பேருந்துகள் இங்கு வந்து செல்லுமே தவிர, இனிமேல் நகரப் பேருந்துகள் மட்டுமே இங்கிருந்து இயக்கப்பட உள்ளன.
இது குறித்து திருக்குறள் முருகானந்தம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியபோது, ‘‘மத்திய பேருந்து நிலையம் அமைவதற்கு முன்பு, அந்த இடம் மைதானமாக இருந்தது. அங்கு சுந்தரம் டிரான்ஸ்போர்ட் பேருந்துகள் நின்றன. சுந்தரம் பேருந்து நிலைய ஊழியர்கள் இந்த மைதானத்தில் ஒருமாதம் தொடர்ந்து நடத்திய போராட்டம் அப்போது பேசுப்பொருளானது. மேலும், மத்திய பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பே தற்போது உள்ள பெரியார் சிலை அங்கு திறக்கப்பட்டது” என்றார்.
எதிர்கால திட்டம்…: தற்போது உள்ள மத்திய பேருந்து நிலைய பகுதியில் வணிக வளாகங்கள், மால்கள், உள் விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளடக்கிய ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வர மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு வருவதன் மூலம் எதிர்காலத்தில் திருச்சி மக்கள் பொழுதுபோக்குவதற்கான சிறந்த இடமாக மத்திய பேருந்து நிலையம் மாறும் என தெரிய வருகிறது.