புதுடெல்லி: உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை நேற்று திறந்தது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் டெஸ்லா ஷோ ரூம் ஆகும்.
மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக உள்ளது. மேலும், மும்பையில், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுடன், மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பும் உள்ளது. ஏற்கெனவே மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக மும்பை உள்ளது. எனவே, டெஸ்லா தனது இந்தியா வர்த்தகத் திட்டத்தின் முதல் கட்டமாக மும்பையை தேர்வு செய்துள்ளது.
மின்சாரத்தில் இயங்குவது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு போன்றவை டெஸ்லா கார்களின் சிறப்புகளாக அறியப்படுகிறது. மேலும், டெஸ்லா கார்கள் அவற்றின் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதற்காகவும் அறியப்படுகின்றன. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் ஷோரூம் திறக்கப்பட்ட போதிலும் வரும் ஆகஸ்ட் மாதம்தான் கார் விற்பனை தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் பேட்டரி கார்கள் ரூ.59.9 லட்சம் முதல் ரூ.67.9 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவில் தற்போது பேட்டரி கார்கள் ரூ.15 லட்சம் என்ற விலையில் கிடைக்கின்றன. எனவே, அந்தக் கார்களின் விலையைக் காட்டிலும் டெஸ்லா கார் விலை மிக மிக அதிகமாக உள்ளது.
மேலும், டெஸ்லா நிறுவனத்துக்கு இந்தியாவில் எந்த தொழிற்சாலையும் இல்லை. எனவே, வெளிநாடுகளில் இருந்து தான் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் இறக்குமதி வரியாக அதிகத் தொகையை (70%வரை) அந்நிறுவனம் செலுத்த வேண்டி வரும்.
எனவே, இந்தக் கார்களின் விலை தற்போது குறைய வாய்ப்பில்லை என்று நுகர்வோர் கருதுகின்றனர். அதிக விலை, இந்தியச் சாலைகளின் தரம் போன்ற காரணிகளால் டெஸ்லாவின் கார் விற்பனை குறைவாகவே இருக்கும் என்று நுகர்வோர் கருதுகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் டெஸ்லா கார் விற்பனை குறித்து பொதுமக்கள் பேசி வருகின்றனர்.