புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மும்பை தாக்குதலைப் (26/11) போலவே, பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) உத்தரவின் பேரில், அந்நாட்டின் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா பஹல்காம் தாக்குதலுக்கான சதித் திட்டத்தை தீட்டி உள்ளது. லஷ்கர் கமாண்டர் சஜித் ஜுத், பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொண்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளார்.
பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் கமாண்டர் சுலைமான் என்பவர்தான் பஹல்காம் தாக்குதலை தலைமையேற்று நடத்தி உள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர் மையத்தில் பயிற்சி பெற்ற சுலைமான், கடந்த 2022-ம் ஆண்டு எல்லையைக் கடந்து ஜம்மு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.