கிங்ஸ்டன்: 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 27 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழுமையாக வென்றது ஆஸ்திரேலிய அணி. மிட்செல் ஸ்டார்க் முதல் 15 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தியும், ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியும் சாதனை படைத்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க்கில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 225 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 143 ரன்களும் எடுத்தன. 82 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 29 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது.
கேமரூன் கிரீன் 42, பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி37 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேமரூன் கிரீன் 42, பாட் கம்மின்ஸ் 5, ஸ்காட் போலண்ட் 1, ஜோஷ் ஹேசில்வுட் 4 ரன்களில் நடையை கட்டினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் அல்சாரி ஜோசப் 5, ஷமர் ஜோசப் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.
204 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 14.3 ஓவர்களில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி மிக குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இதே மைதானத்தில் கடந்த 2004-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 47 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தது.
அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 11 ரன்கள் சேர்த்தார். அதற்கு அடுத்தபடியாக மிகைல் லூயிஸ் 4, ஷாய் ஹோப் 2, அல்ஸாரி ஜோசப் 4 ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் டக் அவுட்டில் வெளியேறினர். உதிரிகளாக 6 ரன்கள் வழங்கப்பட்டிருந்தன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த 2-வது அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
இதற்கு முன்னர் 1955-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 26 ரன்களுக்கு சுருண்டிருந்தது. கிங்ஸ்டன் போட்டியின் 14-வது ஓவரில் ஆஸ்திரேலியின் தொடக்க வீரரான சாம் கான்ஸ்டாஸ் பீல்டிங்கில் தவறு செய்ததால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒரு சிங்கிள் எடுத்து 27 ரன்களை எட்டியது. இல்லையெனில் நியூஸிலாந்து அணியின் 70 ஆண்டுகால எதிர்மறையான சாதனையை மேற்கு இந்தியத் தீவுகள் அணி சமன் செய்திருக்கும்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் அவர், முதல் 5 விக்கெட்களை வெறும் 15 பந்துகளில் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 1947-ம் ஆண்டு பிரிஸ்பனில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் எர்னி டோஷாக், 2015-ம் ஆண்டு டிரென்ட் பிரிட்ஜில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் 2021-ம் ஆண்டு மெல்பர்னில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 19 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். இந்த சாதனையை தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
இலக்கை துரத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு முதல்ஓவரிலேயே மெய்டன் ஓவருடன் 3 விக்கெட்களை சாய்த்து அதிர்ச்சி கொடுத்திருந்தார் மிட்செல் ஸ்டார்க். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர், பெற்றார். இதற்கு முன்னர்2006-ம் ஆண்டு கராச்சி டெஸ்ட்போட்டியில் இந்தியாவின் இர்பான் பதான் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
மிட்செல் ஸ்டார்க்கின் அனல் பறந்த வேகத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 11 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. மிட்செல் ஸ்டார்க்கிற்கு உறுதுணையாக பந்து வீசிய ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். 14-வது ஓவரை வீசிய ஸ்காட்போலண்ட் முதல் மூன்று பந்துகளிலும் ஜஸ்டின் கிரீவ்ஸ் (11), ஷமர் ஜோசப் (0), ஜோமல் வாரிக்கன் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இதன் மூலம் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 10-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி பிராங்க் வொரெல் டிராபியை வென்றது. பார்படாஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 159 ரன்கள் வித்தியாசத்திலும், கிரனடாவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 133 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டிருந்தது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சொந்த மண்ணில் தொடரை முழுமையாக இழப்பது இதுவே முதல் முறை.