தேனி: மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவக்கிரக பிரதிஷ்டை வழிபாட்டுக்காக கடந்த 11-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, 12-ம் தேதி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 13-ம் தேதி நவக்கிரக கோயில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், மாதாந்திர வழிபாட்டுக்காக இன்று (ஜூலை 16) சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ளது.
மாலை 5 மணிக்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
நாளை அதிகாலையில் இருந்து தொடர் வழிபாடுகள் நடைபெற்று, 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். நிறைபுத்தரி பூஜைக்காக 29-ம் தேதி நடை திறக்கப்பட்டு ஒருநாள் வழிபாட்டுக்குப் பின்பு 30-ம் தேதி இரவு நடை சாத்தப்படும்.
தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சபரிமலையில் பக்தர்கள் குடை, மழை கோட் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் வருமாறு தேவசம்போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.