பெரம்பலூர்: கண்ணில் பார்க்க முடியாத காற்றில்கூட ஊழல் செய்த கட்சி திமுக என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியது: இந்த 50 மாத கால திமுக ஆட்சியில் இந்தப் பகுதிக்கு இந்தத் தொகுதியின் அமைச்சர் ஏதாவது ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளாரா? தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 50 நாட்களாக குறைத்துவிட்டார்கள்.
கேட்டால் மத்திய அரசு நிதியைக் குறைத்துவிட்ட தாக கூறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் நீங்கள் மிகப்பெரிய ஊழல் செய்ததால் மத்திய அரசு நிதி கொடுக்க மறுத்தது. ஆனால் நாங்கள் நேரில் சென்று கேட்டுக் கொண்டதால் மத்திய அரசு முதல்கட்டமாக ரூ. 2,919 கோடி நிதியை விடுவித்தது. கண்ணில் பார்க்க முடியாத காற்றில்கூட ஊழல் செய்த கட்சி திமுக. மக்களிடம் செல்வாக்கு இழந்த திமுக அரசு 4 கூடுதல் தலைமைச் செயலாளர்களை செய்தித்தொடர்பாளர்களாக நியமித்துள்ளது.
1 கோடியே 5 லட்சம் பேரிடம் மனுக்கள் வாங்கி, 1 கோடியே 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்கிறார்கள். இது உண்மை என்றால் முழு விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் 210 இடங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
நான் மத்திய அரசுக்கு பயப்படுவதாக ஸ்டாலின் சொல்கிறார். பயம் என்ற சொல்லே எனக்குத் தெரியாது. மண்வெட்டி பிடித்த விவசாயியின் கை இது. இது எதற்கும் அஞ்சாது. குடும்பத்துடன் ஸ்டாலின் ஆகஇருந்தவர், இப்போது 4 ஆண்டுகள் கழித்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களின் பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என ஏமாற்றுகிறார்.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை நடக்கிறது. தமிழகம் கொலை மாநிலம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குன்னம் தொகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும். மக்காச்சோளம், எள், கடலை போன்றவற்றின் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் பொருளாதாரம் உயர அதிமுக உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.