விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அதிநவீன ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பின்னர், சென்னையில் இருந்து தைலாபுரத்துக்கு கடந்த 12-ம் தேதிசென்ற தனியார் துப்பறியும் குழுவினர் 3 மணி நேரம் ஆய்வு செய்தனர். அக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் கூடுதல் எஸ்.பி. தினகரனிடம் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில், “தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் சட்ட விரோதமாக அதிநவீன ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. நிறுவனர் ராமதாஸ் இருக்கையில் இல்லாதபோது அதைப் பொருத்தியுள்ளனர்.
எனவே, வீடு முழுவதும் சோதனை செய்து, மேலும் ஒட்டுகேட்பு கருவிகளை பொருத்தியுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும். இது தொடர்பாக வழக்கு பதிந்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னையில் இருந்து தைலாபுரத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிய ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அன்புமணியும், ஜி.கே.மணியும் சந்தித்து, என்ன பேசினார்கள் என்று தெரியாது. தாயை மகன் சந்திப்பதும், மகனை தாய் சந்திப்பதும் சகஜமானது” என்றார். “அன்புமணியை நீங்கள் சந்திப்பீர்களா?” என்று கேட்டதற்கு, “காத்திருப்போம், காலம் வந்துவிடும். மோதல் போக்கு 4 நாள் இருக்கும். தேர்தல் வரும், அதையும் சந்திப்போம்” என்றார்.