சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடுத்த இரண்டரை மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் ராஜஸ்தானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் என்ற கே.ஆர்.ஸ்ரீராம் கடந்த 2024 செப்.27 அன்று பொறுப்பேற்றார்.
வரும் செப்.27-ம் தேதியுடன் பணிஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யவும், அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஸ்ரீவத்சவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான கே.ஆர்.ஸ்ரீராமை, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். இன்னும் இரண்டரை மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வரும் பட்டு தேவானந்த் ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கும் நீதிபதி விவேக் குமார் சிங் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கும் இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள எம்.எம். ஸ்ரீவஸ்தவா, கடந்த 1964 மார்ச் 6-ம் தேதி பிலாஸ்பூரில் பிறந்தார்.
1987-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 2009-ம் ஆண்டு சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், கடந்த 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாறுதல் செய்யப்பட்டார். பின்னர் கடந்தாண்டு பிப்.6-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.