சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட மாடல் ஆட்சியில், பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா இரண்டா? எதற்குதான் இதுவரை தீர்வு கிடைத்துள்ளது? தமிழகத்தில் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘காலனி’ என்ற சொல்லை நீக்கப் போவதாக கூறி முதல்வர் ஒரு நாடகம் நடத்தினார். இப்போது சமூக நீதி விடுதி நாடகம் நடத்துகிறார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவுப்படி வழங்க வேண்டும். இதுதவிர பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம்தோறும் நிதியும் வழங்க வேண்டும். ஆனால் நிலைமை என்ன? தமிழகத்தில் உள்ள விடுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது.
விடுதி வசதி சரியாக இல்லை என பட்டியலின பழங்குடியின மாணவ, மாணவியர் சாலைக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசிடம் இருந்து பட்டியலின மக்களுக்கு வரும் மத்திய நிதியை, ஆதி திராவிடர் நலத்துறைக்கு முழுமையாகப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலான நிதி திருப்பி அனுப்பப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளில் போர்க்கால அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு, உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.