திமுக அரசியல் நோக்கத்தில் அரசு நிர்வாகத்தையே பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தொடங்கிவிட்டது. நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்த அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் யுவராஜா காட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள், தேவையான துறைகளில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசின் செய்தி துறை வாயிலாகவே, அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், முத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நான்கு பேரை, செய்தி தொடர்பு அதிகாரிகளாக அரசு நியமித்துள்ளது. இதனால், ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசின் செய்தி துறைக்கு இனி என்ன வேலை இருக்கப்போகிறது என்று தெரியவில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக அரசியல் நோக்கத்தில் அரசு நிர்வாகத்தையே பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை தொடங்கிவிட்டது, நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்த தமிழக அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. துறை சார்ந்த செயல் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்தாலும், அது வெளிப்படையாக திமுகவின் தேர்தல் பிரச்சார முயற்சியின் ஒரு பகுதியாகவே தெரிகிறது. இதுவே, தமிழக அரசின் ஊடகக் கொள்கையை சீர்குலைக்கும் அபாயகரமான தொடக்கமாகும்.
பல மாவட்டங்களில் அமைச்சர்களைச் பொது மக்கள் சந்திக்க முடியவில்லை. அதை சரி செய்வதற்கு முதல்வரின் செயலாளராக இருந்தவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மக்களுக்கு தகவல்களை வழங்குவது என்ற பெயரில், திமுகவின் சாதனைப் பட்டியலை மட்டும் விளம்பரப்படுத்தும் நிலைக்கு சென்றால், நிர்வாகத்தின் நடுநிலைத் தன்மை எங்கே என்ற கேள்வி எழுகிறது.
இதுவரை தமிழகத்தில் இதுபோன்ற செய்தி தொடர்பாளர் நியமனம் நடைபெற்றதில்லை. அரசாங்க நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. பொது மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் நிர்வாக இயந்திரத்தை, திமுக கட்சியின் விளம்பரத்துக் காக பயன்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும். மக்கள் நலனுக்காக இருக்க வேண்டிய நிர்வாகம், தேர்தல் நலனுக்காக செயல்படத் தொடங்கும் நிலையில், இது ஜனநாயகத்துக்கே பெரிய சவால் ஆக மாறிவிடும்” என்று யுவராஜா கூறியுள்ளார்.