தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து சு.கல்யாணசுந்தரம் எம்.பி நேற்று நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனை நியமித்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த சு.கல்யாணசுந்தரம் 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கட்சியில் அனுபவம் மிக்கவரான கல்யாணசுந்தரம், பாபநாசம் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, கடந்த முறை இவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கட்சித் தலைமை வழங்கியது.
அதன்பின், திமுகவில் கும்பகோணம் ஒன்றியத்தை மூன்றாக பிரித்து, அதில் மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியை தனது மகன் எஸ்.கே.முத்துச் செல்வனுக்கு வழங்கினார். மேலும், கடந்த முறை தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியையும் பெற்று கொடுத்தார். இதனிடையே, கடந்த சில மாதங்களாக இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தற்போது மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து கல்யாணசுந்தரத்தை விடுவித்து, எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனை நியமித்து கட்சித் தலைமை நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து திமுகவினர் கூறியது: திமுகவில் மூத்த நிர்வாகியான கல்யாணசுந்தரம், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். நீர் நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இந்த நிறுவனத்தின் கட்டிடத்தை அகற்ற முயன்ற போது, அதிகாரிகளை மிரட்டிய விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இதன் பின்னணியில் அப்போதைய மாநகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்ய கல்யாணசுந்தரமும், முத்துச்செல்வனும் தான் காரணம் என கூறப்பட்டது.
அதேபோல, அரசு விழா ஒன்றில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி ஆர்.சுதாவை மேடையில் வைத்துக் கொண்டு, ”காங்கிரஸ் கட்சியில் இங்கு ஆளே இல்லை, தலைமை சொல்லியதால் உங்களை ஜெயிக்க வைத்தோம். உங்களது நிதியை கும்பகோணம் வளர்ச்சி பணிகளுக்கு செலவிட வேண்டும்” என கல்யாணசுந்தரம் பேசினார். இதனால் எம்.பி சுதா அதிருப்தியடைந்து, இவ்விவகாரத்தை திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
மேலும், கல்யாணசுந்தரம் பட்டா வழங்கும் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ”பட்டா கேட்டவுடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட 10 மாதம் கழித்த பிறகு தான் குழந்தை பிறக்கும். உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத்தான் இருக்கும்” என்று பேசியதும், செய்தியாளர்கள் சந்திப்பில் துண்டுச் சீட்டில் கேள்விகளை எழுதிக் கொடுத்து, அந்த கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் எனக் கூறியதாக வெளியான தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல, கல்யாணசுந்தரத்தின் மகன் முத்துச்செல்வன் நடத்தி வரும் மினரல் வாட்டர் நிறுவனத்தில், தர நிர்ணய அதிகாரிகள் அண்மையில் நடத்திய ஆய்வில் போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்தியது தெரியவந்த விவகாரமும் கட்சி தலைமையிடம் அதிருப்தியை உண்டாக்கியது.
அத்துடன், அண்மையில் சென்னையில் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாபநாசம் தொகுதி திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் மற்றும் அவரது மகனின் செயல்பாடுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து தான், தற்போது மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார் என்றனர்.