இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இப்படத்தின் அறிமுக டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஆக பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் சேர்ந்து இப்படத்துக்கு இசையமைப்பதை படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, “எல்லா ஹாலிவுட் படங்களிலும் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் காட்டினார்கள். நம்மை ஏழைகளாகவும், எப்போதும் அதிர்ஷ்டம் குறைந்தவர்களாகவும், உலகத்தால் மோசமாக நடத்தப்பட்டவர்களாகவும் காட்டினார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நான் பிறந்த நாடு அதுவல்ல என்று காட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
நாமே நமக்கு நிதியளிக்கிறோம். நாங்கள் யாருடைய பணத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. உலகிலேயே மிகப் பெரிய படத்தை, மிகச் சிறந்த கதைக்காக, உலகம் பார்க்க வேண்டிய மிகப்பெரிய காவியத்திற்காக தயாரிக்கிறோம். சில மிகப் பெரிய ஹாலிவுட் படங்களைத் தயாரிக்க ஆகும் செலவை விட இது குறைவானதுதான் என்று நான் நினைக்கிறேன்.
இரண்டு படங்களையும் எடுத்து முடிக்கும்போது மொத்தமாக சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவு ஆகியிருக்கும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,000 கோடி” என்று நமித் மல்ஹோத்ரா தெரிவித்தார்.