ரஜினியிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘மகாராஜா’ இயக்குநர். இதன்மூலம் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகாராஜா’. இப்படத்தை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள், நித்திலன் இயக்கத்தில் நடிக்க முன்வந்தார்கள். அவரோ தனது அடுத்த படத்துக்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே, சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார் நித்திலன். இக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விரைவில் திரைக்கதை உடன் கூடிய முழுமையான கதையை கூறவுள்ளார் நித்திலன். இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி இணையுமா என்பது குறித்து தெரியவரும். இந்தக் கூட்டணி இணைந்தால் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனைத் தொடர்ந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், ’ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.