சென்னை: சென்னையில் 6 இடங்களில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (15-ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 10 ஆயிரம் முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வகையில், சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் 6 இடங்களில் நடைபெறுகிறது.
அதன்படி, தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பள்ளி, சூளைமேடு கில் நகர் விளையாட்டு திடல், பட்டாளம் ஸ்டிரா ஹன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம், மாதவரம் தபால் அலுவலகம் சாலையில் உள்ள எம்.ஆர்.பேலஸ், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வேலம்மாள் அரங்கம், சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரி ஆகிய 6 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. இவற்றை சென்னை வாசிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.