லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரவீந்திர ஜடேஜா கடைசி வரை போராடி 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தில் 62.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40. பென் ஸ்டோக்ஸ் 33, ஹாரி புரூக் 23 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து 193 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 0, கருண் நாயர் 14, கேப்டன் ஷுப்மன் கில் 6, ஆகாஷ் தீப் 1 ரன்களில் நடையை கட்டினர். கே.எல்.ராகுல் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெற்றிக்கு மேற்கொண்டு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ரிஷப் பந்த் 12 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆஃப் ஸ்டெம்பு சிதற போல்டானார். இதைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 58 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து நடையை கட்டினார். 23 பந்துகள் இடைவெளியில் இந்த 3 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் அழுத்தத்தை உருவாக்கினர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள். 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்.
30 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை கிறிஸ் வோக்ஸ் பிரித்தார். நித்திஷ் குமார் ரெட்டி 53 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் சேர்த்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 39.3 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. கைவசம் 2 விக்கெட்கள் மட்டுமே இருக்க வெற்றிக்கு
மேலும் 81 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ராவுடன் இணைந்து போராடினார். 9-வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
ஜஸ்பிரீத் பும்ரா 54 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தை மிட் ஆன் திசையில் தூக்கி அடித்தபோது பதிலி வீரர் குக்கிடம் கேட்ச் ஆனது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவையாக இருந்தது. எனினும் ஜடேஜாவும், முகமது சிராஜும் பொறுமையாக விளையாடி ஆட்டத்தை நகர்த்திச் சென்றனர். முகமது சிராஜ் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயப் பஷிர் பந்தை தடுப்பாட்டம் மேற்கொண்ட போது போல்டானார்.
முடிவில் இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா 181 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்களையும், கிறிஸ் வோக்ஸ், ஷோயப் பஷிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.