புதுடெல்லி: ‘‘கணவன் – மனைவிக்குள் நடைபெற்ற உரையாடல்களை, ரகசியமாக பதிவு செய்திருந்தால் அவற்றை ஆதாரமாக பயன்படுத்தலாம்’’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா குடும்பநல நீதிமன்றத்தில் திருமணம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனைவி தன்னை சித்ரவதை செய்வதாக கணவன் குற்றம் சாட்டினார். அதற்கு ஆதாரமாக தொலைபேசியில் மனைவி பேசிய அனைத்தையும் ரகசியமாக பதிவு செய்து அதை டிஸ்க்கில் பதிவேற்றம் செய்து சமர்ப்பித்தார். அந்த தொலைபேசி உரையாடல்களை குடும்பநல நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக் கொண்டது.
இதை எதிர்த்து மனைவி தரப்பில் பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையின் போது, ‘‘எனக்கு தெரியாமல் அல்லது என்னுடைய அனுமதி இல்லாமல் தொலைபேசி உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது என்னுடைய அந்தரங்கமான விஷயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும்’’ என்று மனைவி வாதாடினார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், கணவன் அளித்த தொலைபேசி உரையாடல் ஆதாரத்தை ஏற்க முடியாது என்று உத்தரவிட்டது. அத்துடன், கணவன் – மனைவி இடையே நடைபெறும் உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்வது தனியுரிமையை மீறுவதாகும். அது சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தப்படவில்லை என்று தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் உளவு பார்ப்பது திருமணம் வலுவாக இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. எனவே, கணவன் மனைவிக்குள் நடைபெறும் உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்திருந்தால், திருமண வழக்குகளில் அதை ஆதாரமாக பயன்படுத்தலாம்.
கணவன் – மனைவி இருவரும் உரையாடல்களைப் பதிவு செய்வது அவர்களின் திருமணம் வலுவாக இல்லை என்பதற்கான சான்றாகும், எனவே அதை நீதித்துறை நடவடிக்கைகளில் பயன்படுத்தலாம். இதுபோன்ற உரையாடல்களின் ரகசிய பதிவுகளை ஆதாரமாக ஏற்றுக் கொண்டால் குடும்பத்தின் நல்லிணக்கம் கெடும். கணவன் – மனைவி உறவு பாதிக்கும். உளவு பார்ப்பதை ஊக்குவிப்பது போலாகும் என்று கூறுகின்றனர்.
அத்தகைய வாதம் ஏற்கத்தக்கது என்று நாங்கள் நினைக்கவில்லை. திருமணத்துக்குப் பிறகு கணவன் – மனைவி ஒருவரை ஒருவர் உளவு பார்க்கும் அளவுக்கு வந்துவிட்டால், அதுவே அவர்களுக்குள் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறி. எனவே, பதிண்டா குடும்பநல நீதிமன்றம், தொலைபேசி உரையாடல் விவரங்களை ஆதாரமாக கொண்டு வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.