திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே உள்ள இசுகபல்லி எனும் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல தோட்டங்களில் தொழிலாளர்கள் மாங்காய் அறுவடையில் ஈடுபட்டனர். ஷெட்டிகுண்டா ரயில்வே காலனி, பத்தவேடு, கல்வகுண்டா ஆகிய கிராமங்களை சேர்ந்த இவர்கள் 21 பேரும் காலை முதல் மாலை வரை மாங்காய்களை அறுத்து பிறகு லாரியில் ஏற்றினர். பிறகு அதே லாரியில் தங்கள் ஊருக்குப் புறப்பட்டனர்.
அந்த லாரி ரயில்வே கோடூரு மாங்காய் சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புல்லம்பேடு ரெட்டிசெருவு எனும் இடத்தில் ஏரிக்கரை மீது அந்த லாரி செல்லும்போது திடீரென நிலைதடுமாறி ஏரியில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில், சிட்டம்மாள் (25), துர்கம்மாள் (32), ஸ்ரீனு (33), லட்சுமி தேவி (36), ராதா (39), சுப்பம்மாள் (37), ரமணா (42) உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முனிசந்திரா (48) என்பவர் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் 12 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ராஜம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விபத்து குறித்து மிகுந்த வேதனை தெரிவித்தார்.