சென்னை: நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி: பிரபல திரைப்பட ஆளுமை பி. சரோஜாதேவியின் மறைவால் வருத்தம் அடைந்தேன். இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ஒரு சிறந்த சின்னமாக அவர் நினைவுகூரப்படுவார்.அவரது பன்முகத்தன்மை கொண்ட நடிப்பு தலைமுறை தாண்டியும் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி.
முதல்வர் ஸ்டாலின்: தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார்.
எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆருடன், சரோஜாதேவி இணைந்து நடித்த திரைப்படங்கள் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. ‘சரோஜாதேவி’ எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படங்களில் நடித்த சரோஜா தேவி கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அனைத்துக் குடும்பங்களுக்கும் நன்கு அறிமுகமானவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டனுடன் இணைந்து பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் அம்மாவாக நடித்தவர். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். கலை உலகில் அரசியாக வாழ்ந்தவர். அவரது இழப்பு திரை உலகுக்கு ஈடு இணை இல்லாத இழப்பு.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கலைநயமிக்க நடிப்பாற்றலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த சரோஜாதேவியின் புகழ், அவருடைய காவியப் படைப்புகள் மூலம் என்றும் நிலைத்திருக்கும்.
ரஜினிகாந்த்: பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
கமல்ஹாசன்: என்னைப் பார்க்கும் இடமெல்லாம் – என் எந்த வயதிலும் – கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர், மறைந்துவிட்டார்.
என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசிதீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள்ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனா கவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்.
குஷ்பு: சரோஜாதேவி எல்லா காலத்திலும் சிறந்த நடிகை. தென்னிந்திய சினிமாவில் வேறு எந்த நடிகையும் அவரைப்போல பெயரும் புகழும் அனுபவித்ததில்லை. அவ்வளவு அன்பானவர் அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர். மேலும் தமாக தலைவர் ஜி.கே.வாசன், சசிகலா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.