‘திருடாதே’ படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நாயகியாக ஒப்பந்தமானார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி, அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனது கனவுப்படமான ‘நாடோடி மன்னன்’ படத்தை முடித்து வெளியிடுவதில் எம்.ஜி.ஆர். தீவிரமாக இருந்தார்.
‘நாடோடி மன்னன்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகை பானுமதி நடித்து வந்தார். அவர் சுதந்திரமாக செயல்படக் கூடியவர். எம்.ஜி.ஆரும் அப்படியே’. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் இருந்து பாதியில் பானுமதி விலகிக் கொள்ள, நாயகியானார் சரோஜாதேவி. அவர் வரும் காட்சிகள் வண்ணத்தில் இருக்கும். நாயகியாக நடித்த முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆரின் ஜோடி. ‘நாடோடி மன்னன்’ பிரம்மாண்ட வெற்றி பெற சரோஜாதேவி உச்சத்துக்கு சென்றார். ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருடன் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆருடன் அதிகமாக நடித்தவர் சரோஜாதேவி. இருவரும் 26 படங்களில் இணைந்து நடித்தனர். இப்போது திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் சிறப்பாக இணைந்து நடிப்பதை இருவருக்கும் நல்ல ‘கெமிஸ்ட்ரி’ என்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் இந்த ‘கெமிஸ்ட்ரி’ சிறப்பாக அமைந்து, எங்க வீட்டுப் பிள்ளை, அன்பேவா, பறக்கும் பாவை, படகோட்டி என அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் மூலம் இந்த ஜோடி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
அப்போதும் சரி, எம்.ஜி.ஆர் மறைந்த பிறகும் சரி, எந்த ஒரு மேடையிலும் சரோஜாதேவி பேசும்போது ‘என்னை வாழ வைத்த தய்வம்’ (தெய்வம் என்பதை கொஞ்சு தமிழில் ‘தய்வம்’ என்றுதான் சொல்வார்) என்று எம்.ஜி.ஆரை குறிப்பிடத் தவறமாட்டார். அதனால், எம்.ஜி.ஆரின் ஜோடியாகவே மக்களின் மனதில் பதிந்துவிட்டார்.
திராவிட இயக்கத் தலைவர் என்ற முறையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சென்னையில் மதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ நடத்தினார். அதில் சிறப்பு விருந்தினராக சரோஜாதேவி கலந்து கொண்டார். அந்த விழாவில் சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆரின் உருவங்கள் பதித்து ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட பட்டுப் புடவையை மேடையில் பரிசாக வழங்கினார் பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ். அந்தப் புடவையை அவ்வளவு மகிழ்ச்சியோடு தன் மேல் போர்த்திக் கொண்டு சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்தார் சரோஜாதேவி. அந்த அளவுக்கு அவருக்கு எம்.ஜி.ஆர் மீது அன்பு இருந்தது.
கன்னடம் தாய்மொழி என்பதால் சரோஜாதேவியின் தமிழ் உச்சரிப்பு மழலை போலத்தான் வரும். என்றாலும் அதுவே அவருக்கு ‘பிளஸ்’ ஆகி ரசிகர்களை ரசிக்க வைத்தது. நாடோடி மன்னன் படத்தில் ஒரு காட்சியில் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சரோஜாதேவியை என்னவென்று எம்.ஜி.ஆர் விசாரிக்க, ‘ஒண்ணுமில்லே சும்மா’.. என்ற வசனத்தை அவர் ‘வண்ணுமில்லே ச்சும்மா’ என்று உச்சரித்ததைக் கேட்டு சொக்கிப் போயினர் ரசிகர்கள். அவரது கிளிமொழி பேச்சால் கன்னடத்து பைங்கிளி என்று கொண்டாடப்பட்டார்.
‘நாடோடி மன்னன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து திருஷ்டி பரிகாரம்போல சீர்காழியில் ‘இன்பக் கனவு’ நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை தூக்கிப் போடும்போது, சமநிலை தவறி விழுந்து கால்முறிவு ஏற்பட்டது. இதனால், ஏற்கெனவே, நடித்துக் கொண்டிருந்த படங்கள் பாதியில் நின்றன. ‘திருடாதே’ படத்தை முதலில் தயாரிக்கத் தொடங்கி சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தவர், சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த சின்ன அண்ணாமலை. அவர்தான் முதலில் சரோஜாதேவியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.
ஆனால், ‘நாடோடி மன்னன்’ முதலில் வெளியானது. கடன் வாங்கித்தான் ‘திருடாதே’ படத்தை அவர் தயாரித்துக் கொண்டிருந்தார். கால் குணமாகி தான் நடிக்க வருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்ற நிலையில், படம் தாமதத்தால் வட்டி அதிகமாகி சின்ன அண்ணாமலை நஷ்டம் அடையக் கூடாது என்பதால், அதுவரை எடுக்கப்பட்ட படத்தை கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனிடம் விற்கச் சொன்னார் எம்.ஜி.ஆர். அதன்படி ஏ.எல்.சீனிவாசனிடம் நல்ல தொகைக்கு ‘திருடாதே’ படத்தை சின்ன அண்ணாமலை விற்றுவிட்டார். ஏ.எல்.எஸ். பேனரில் படம் வெளியானதால் சரோஜாதேவியை நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்தவர் சின்ன அண்ணாமலை தான் என்பது வெளியே தெரியாமல் போனது. ஆனால், சரோஜாதேவிக்குத் தெரியும்.
‘திருடாதே’ படமும் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவன்று, சின்ன அண்ணாமலை வீட்டுக்குச் சென்றார் சரோஜாதேவி. நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் ஆகியவற்றை ஒரு பெரிய தட்டில் வைத்து சின்ன அண்ணா மலையை வணங்கி மரியாதை செய்தார். சினிமா என்பது ஒரு வியாபாரம். அதில் நன்றி என்பது அபூர்வம். காற்றில் கலந்துவிட்ட கன்னடத்து பைங்கிளி நன்றி மறக்காதவர்!