சேலம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசு அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று செல்போன் எண்களைப் பெற்று திமுக ஐடி- விங்குக்கு கொடுக்கப்படுகிறது, என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நெடுஞ்சாலை நகர் பகுதியில் புதிய கட்சி அலுவலகத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எழுச்சி மக்கள் மத்தியில் காண முடிகிறது.
அதிமுக ஆட்சியின் போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின், அந்த மனுக்களை பெட்டியில் போட்டு சீல் வைத்து எடுத்துச் சென்றார். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் அந்த மனுக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால், இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்காக அரசு அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று தந்திரமாக மக்களை ஏமாற்றி செல்போன் எண்களை பெற்று திமுக ஐடி-விங்குக்கு கொடுக்கப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் வர 8 மாதம் உள்ள நிலையில், அதிமுக கூட்டணிக்கு பல்வேறு புதிய கட்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது.
சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மக்கள் குறைகளை சொல்வதற்கான மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி மீது திமுக பெண் கவுன்சிலர் மூலம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகின்றன.
அதிமுக ஆட்சி அமைந்ததும் துறைவாரியாக திமுக செய்துள்ள ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பாலு, மாவட்ட பொறுப்பாளர் சிங்காரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.