ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 1931, ஜூலை 13-ல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் இறந்தனர். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக ஜம்மு காஷ்மீரில் அனுசரிக்கப்பட்டு வந்தது.
அன்று அரசு விடுமுறை நாளாகவும் இருந்தது. ஆனால் கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பொது விடுமுறை நாள் பட்டியலில் இருந்து இது நீக்கப்பட்டது. மேலும் தியாகிகள் கல்லறையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் உமர் அப்துல்லாவை நேற்று காவலர்கள் தடுத்தனர். இதையடுத்து உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்து சென்று கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து உமர் அப்துல்லா கூறுகையில், ‘‘காஷ்மீரில் ஜூலை 13-ம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படும் நிலையில் நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டேன். கல்லறையில் அஞ்சலி செலுத்த முயன்றபோது இன்று மீண்டும் தடுக்கப்பட்டேன். எந்த சட்டத்தின் கீழ் நான் தடுக்கப்பட்டேன் என்பதை அறிய விரும்புகிறேன்’’ என்று கேள்வி எழுப்பினர்.