புதுடெல்லி: கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் மெஹ்திக்கு,நிமிஷா மயக்க ஊசியை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சூழலில் அவரை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி, ‘‘ஏமனில் நிமிஷா பிரியாவை காப்பாற்ற மத்திய அரசு சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நிமிஷாவின் குடும்பத்தினர் ஏமனில் முகாமிட்டு உள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.
பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “ஏமன் சிறையில் நிமிஷா பிரியா உள்ளார். நாங்கள் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று விரும்புகிறோம். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.
ஷரியா என்றழைக்கப்படும் இஸ்லாமிய சட்டத்தில் குருதிப் பணம் என்பது ஒரு வகையான நீதியாக கருதப்படுகிறது. எனவே, பிரியா குடும்பத்தினர் சார்பில் உயிரிழந்த மெஹ்தி குடும்பத்தினருக்கு ரூ.8.6 கோடியை வழங்க முன்வந்துள்ளனர்.
அதை மெஹ்தி குடும்பத்தினர் ஏற்பார்களா என்பதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.