திருச்சி: ‘அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: இந்த திருமணத்தில் மணமகளுக்கு இரண்டு முடிச்சுதான் போட வேண்டும் என தாய் கூறியதைக் கேட்காமல் மணமகன் மூன்று முடிச்சு போட்டு உள்ளார். காரணம் ஏற்கெனவே மூன்று முடிச்சும் நீங்கள்தான் போட வேண்டும் என மணப்பெண் கூறியிருக்கிறார்.
மணமகன் தற்போதே மனைவியின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டார். மனைவியின் பேச்சை கேட்பது தவறு கிடையாது. அதே நேரம் மனைவி பேச்சை மட்டும் கேட்காமல் அம்மா, அப்பாவின் பேச்சையும் கேட்க வேண்டும். அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம். அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கிவிடக் கூடாது. அந்த பிரச்சினை எனக்கும் இருக்கிறது.
இந்த அரசு மகளிருக்கான அரசாக செயல்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் விடுபட்ட தகுதியானவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மூர்த்தி, சிவசங்கர், கோவி.செழியன், அன்பில் மகேஸ் உள் பட பலர் கலந்துகொண்டனர்.