சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துறை செயலர் அமுதா, இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முதல்வர் தனி பிரிவில் (‘சிஎம் செல்’) பெறப்படும் மனுக்கள், அவரது பயணத்தின்போது மக்கள் தரும் மனுக்கள், அழைப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தீர்வு காணும் நோக்கில் ‘முதல்வரின் முகவரி துறை’ கடந்த 2021 நவம்பரில் தொடங்கப்பட்டது.
அதன்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு, கடந்த ஜூன் 30 வரை 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் நகர பகுதிகளில் 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.
இதன் அடுத்த கட்டமாக தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் நகர்ப்புறத்தில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 கவுன்ட்டர்கள், இதர துறைகளுக்கு 13 கவுன்ட்டர்கள், இ-சேவை, ஆதார் அட்டை மாற்றத்துக்கு 2 கவுன்ட்டர்கள் உள்ளன. இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முகாம்களில் அந்த சேவையை பெற ரூ.30 கட்டணமாக செலுத்தினால் போதும்.
ஜூலை 15-ம் தேதி (இன்று) தொடங்கி வாரம்தோறும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் முகாம் நடைபெறும். இதுபோல நவம்பர் வரை தொடர்ச்சியாக 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடம், நாட்கள் விவரம் இதில் உள்ளது. மக்கள் தங்கள் பகுதிகளில் எப்போது முகாம் நடைபெறுகிறது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.