தகுதி, திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டே இருந்தால் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் தானாகவே வந்து சேரும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை உத்தண்டியில் இந்து பவுன்டேசன் எனும் அமைப்பு சார்பில் சுத்தானந்தா ஆசிரமத்தில் தலைமைத்துவம், அரசியல் மற்றும் ஆளுமை தொடர்பாக இரண்டு நாள் பயிலரங்கம் நேற்று தொடங்கியது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலத் தலைவருமான கே.அண்ணாமலை, தேசிய மாநில செயலாளர், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பார்வையாளர் சுனில் தியோதர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 70 பேர் பங்கேற்றுள்ள இப்பயிலரங்கு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதில் அண்ணாமலை பேசியதாவது: காமராஜர், கக்கன் போன்றவர்கள் முன்பு தலைவராக இருந்தனர். அரசியல் தலைவராக வர இரண்டு தகுதிகள் முக்கியம். நீங்கள் அரசியல் தலைவராக வேண்டும் என்றால் சமூகம் உங்களுக்கு ஒரு தேர்வை வைக்கும். அதன்படி நீங்கள் மனித நேயம் மிக்கவராக இருக்க வேண்டும். சாதி , மதம், சித்தாந்தம் போன்றவற்றை கடந்து வெளியில் வர வேண்டும். அப்போதுதான் மக்கள் உங்களை அரசியல் தலைவராக ஏற்பார்கள். இந்தியாவில் இருந்த 30 ஆண்டுகளில் மகாத்மா காந்தி 29 ஆண்டுகள் எந்த பதவியிலும் இல்லை. ஓர் ஆண்டு மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
வெளியில் எதிர்பார்க்கும் மாற்றத்தை நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நல்ல முறையில் உடை உடுத்த வேண்டும். நீங்கள் அமரும் இருக்கை உங்கள் அதிகாரத்தை தீர்மானிப்பதில்லை. உங்கள் செயல்பாடே தீர்மானிக்கும். எதையும் எதிர்பார்க்காமல் கட்சிகளில் சேர வேண்டும். பதவி வரலாம். போகலாம். எந்த பதவியாக இருந்தாலும் ஒருநாள் இல்லாமல் போவது இயல்புதான். தன்னை அவமதித்தவர்களை, அதிகாரத்துக்கு வந்தபின் பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் இருப்பவரே சிறந்த தலைவராக வருவார் என்று மோடி கூறியுள்ளார். பழிவாங்க தொடங்கினால் நாம் பழிவாங்கிக் கொண்டேதான் இருக்க முடியும்.
அரசியல்வாதி ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தால் முதலில் நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம் நெல்சன் மண்டேலாவின் ‘லாங் வாக் டு ஃப்ரீடம்’ (Long walk to freedom) புத்தகம். நீங்கள் அரசியலில் தலைவராக வேண்டும் என்றால் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் எந்த தவறும் செய்யக் கூடாது. உங்கள் தகுதி, திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டே இருந்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் தானாகவே வந்து சேரும். பழிவாங்கும் போக்கு அரசியல்வாதிக்கு இருக்கலாம் , ஆனால் தலைவனுக்கு இருக்க கூடாது. கட்சி அலுவலகங்களில் நிற்காமல் மக்களை தேடி செல்லுங்கள். தலைவர்கள் அருகில் நிற்க நேரம் செலவிடாதீர்கள்.
சித்தாந்தத்தை பார்த்து கட்சிக்கு வாக்களிப்பதில் இருந்து வாக்காளர்கள் வெளியில் வந்து விட்டனர். வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தித் தான் ஆக வேண்டும். உலகம் முழுவதும் அடிப்படை மாற்றத்தை கொடுக்கும் தலைவர்களை நோக்கி மக்கள் செல்கின்றனர். அரசியல் வாதிகள் மக்களை கவர மாற்று வழிகளை கையாளுகின்றனர்.
அரசியலில் எல்லோரையும் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் யாருடைய பிரதியாகவும் இருக்காதீர்கள். உங்கள் சுய குணத்தை இழந்து விடாதீர். உங்களுடைய தனித்தன்மையை விட்டுக் கொடுத்து விடாதீர். உலகம் உங்களுக்காக ஒரு நாள் மாறும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.