திருவள்ளூர்: படிப்பை தொடர வசதி இல்லாத தால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரை சேந்த வேங்கடசாமி என்பவரின் மகள் ஹெப் சிபா. இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை: இதனால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர்,உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மாணவியிடம் விசா ரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி படிப்பை தொடர வசதி இல்லாததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து திருமுல்லைவாயில் காவல் நிலைய காவலர்கள் சேர்ந்து மாணவியின் படிப்புக்காக உதவ முன்வந்தனர்.
திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் மில்லர், துணை ஆய்வாளர்கள் பாமா, அமுல் ஆகியோர் மாணவியை நேரில் அழைந்து ரூ.50 ஆயிரத்துக் கான காசோலையை அவரிடம் வழங்கினர். படிப்பை தொடர வசதி இல்லாததால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவிக்கு உதவிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.