கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி, சென்னை தாம்பரத்தில் இருந்து ரயில் மூலம் சிதம்பரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வந்தார். வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் ரயில் நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கீழவீதியில் உள்ள ஓட்டலில் முதல்வர் நேற்று இரவு தங்கினார்.
இன்று காமராஜர் பிறந்தநாள் என்பதால், காலை 9 மணிக்கு, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, சிதம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
பின்னர், லால்புரம் பகுதியில் அமைந்துள்ள எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் மற்றும் அவரது சிலையையும், சிதம்பரம்பேட்டை பகுதியில் அம்பேத்கர் சிலையையும் திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து, பரமேஸ்வரநல்லூர் பகுதியில் நடைபெறும் விழாவில் உரையாற்றுகிறார்.
நவம்பர் வரை 10,000 முகாம்கள்: முதல்வர் தொடங்கி வைக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று தொடங்கி நவம்பர் வரை நடைபெறும். நகர்ப்புறங்களில் 3,768, ஊரக பகுதிகளில் 6,232 என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விடுபட்டவர்கள் இந்த முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.