மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா, அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்கக்கலசம், கோவர்த்தனாம்பிகை சந்நிதி விமானம், வல்லப கணபதி கோயில் விமானம் ஆகியவற்றை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. உபயதாரர்கள் மூலமும் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின.
தமிழ் வேதங்கள் முற்றோதல்: அதன்படி, ஜூலை 10-ம் தேதி மாலை வள்ளி தேவசேனா மண்டபத்தில் 75 யாக குண்டங்கள் அமைத்து 200 வாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதல்கால யாக பூஜை தொடங்கியது. இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள் என காலை, மாலை யாக பூஜைகள் நடைபெற்றன. வேத சிவாகமத்துடன் பெண் ஓதுவார்கள் உட்பட 80 ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் கந்தர் அனுபூதி ஆகிய செந்தமிழ் வேதங்களை முற்றோதுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் பரிவார மூர்த்திகளுடன் புறப்பட்டனர். நேற்று அதிகாலை திருப்பரங்குன்றம் வந்த மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில்வரவேற்பு அளிக்கப்பட்டது. நள்ளிரவிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். சந்நிதி வீதி, கிரி வீதி, சரவணப்பொய்கை என திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் வெள்ளமாகக் காட்சியளித்தது.
ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 14) அதிகாலை 3.45 மணிக்கு எட்டாம் கால யாகபூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
புனித நீர் தெளிப்பு: இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் ராஜகோபுரத்தில் ஏறி பச்சைக்கொடியை அசைத்தனர். அதைத் தொடர்ந்து அதிகாலை 5.31 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி ஆகியவிமானங்களுக்கு புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது பக்தி பரவசத்தில் ‘அரோகரா… அரோகரா’ என விண்ணதிர பக்தர்கள் முழக்கங்களை எழுப்பினர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 10 ட்ரோன்கள் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர்பங்கேற்றனர். மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா தலைமையில் கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் மணிச்செல்வன், சண்முகசுந்தரம், பொம்மதேவன், ராமையா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.