திருநெல்வேலி: சில நடிகர்கள் மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள்போல் காட்டிக்கொள்கிறார்கள் என்று தவெக தலைவர் நடிகர் விஜய்யை மறைமுகமாக திமுக மகளிரணி செயலாளரும். திமுக எம்.பி.யுமான கனிமொழி குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளின் திமுக பாக முகவர்கள் கூட்டம் திருநெல்வேலி அருகே செங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் தலைமை வகித்தார், செயலர் ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, “திமுக பல போராட்டங்களைக் கடந்து இந்த நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் இருப்போருக்கு சிம்ம சொப்பனமாகவும், பாஜகவின் அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடியவராகவும் தமிழக முதல்வர் இருக்கிறார். அவரை தலைவராக கொண்டுள்ள இயக்கத்தை நாம் பெற்று இருக்கிறோம். இந்த நாடே நம்மை பார்த்து பிரம்மிக்கக் கூடிய ஒரு போர் குணத்தோடு திமுக இருந்து கொண்டிருக்கிறது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொழி சார்ந்த பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று தமிழ்நாட்டின் வரலாற்று பெருமைகளை எல்லாம் மத்திய அரசு மறைத்து, மறுதலிக்க துணிந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை என்பதைக் கொண்டு வந்து அடக்க நினைக்கிறது. இந்தியை கொண்டு வந்து கல்வித் திட்டத்தில் திணித்து நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் கேள்விக்குறியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் இருந்து வருகிறது. தமிழகம் வளர்ந்த மாநிலமாக மாறிவிடக்கூடாது அதனை முடக்க வேண்டும் என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், அத்தனை சவால்களையும் தாண்டி ஒரு சிறப்பான ஆட்சியை தமிழக முதல்வர் கொடுத்து வருகிறார். அட்மினிஸ்ட்ரேஷன் என்றால் என்ன, ஆட்சி அதிகாரம் என்றால் என்ன என்று தெரியாமல் புதிதாக வந்து எதை வேண்டுமானாலும் பேசி வருபவர்களால் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்யமுடியாது.
அதே நேரத்தில் யார் தமிழகத்தை, தமிழ் மக்களை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்களோ, அவர்களோடு கூட்டணியில் அதிமுக இருக்கிறது. இதுபோன்ற கட்சிகளை நிச்சயமாக அவர்களுடைய துரோகத்தை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்பதை பயன்படுத்திட வேண்டும்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லிக் கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் கட்டாயம் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். தான் போட்டியிடக்கூடிய ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குழப்பங்களை பாஜக ஏற்படுத்தி வெற்றி பெறுகிறது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது.
டெல்லியில் முதல்வர் போட்டியிடும் தொகுதியில் இதனை செய்தார்கள். பிஹாரில் தற்போது இந்த குளறுபடியை பாஜக செய்து வருகிறது. நமக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். அவர்கள் நியாயமாக வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த திமுக நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் கனிமொழி பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் தொகுதி பார்வையாளர்கள் சுரேஷ்ராஜன், ஜோசப்ராஜ், சிவராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஞானதிரவியம், பிரபாகரன், சித்திக், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோஷல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “ஒரு திரைப்படம் மக்களுக்கு பல செய்திகளை சொல்லக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சில நடிகர்கள் சினிமாவில் நடிக்கும்போது லாக்-அப் மரணங்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டு அரசியல் கட்சி தொடங்கியவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பதைப்போல் காட்டிக்கொள்கிறார்கள். இது நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் இப்போது லாக்-அப் மரணங்களுக்கு எதிராக பேசுகிறார்கள்.
திமுக கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் மக்களோடு தமிழக முதல்வர் கூட்டணி அமைக்கிறார். அதுவும் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.