புதுடெல்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள விவகாரத்தில் அரசு இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
கேரள நர்ஸ் நிமிஷாவின் கழுத்துக்கு தூக்குக் கயிறு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவரைக் காப்பாற்ற மத்திய அரசின் தலையீட்டைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று ஆஜரான அட்டர்னி ஜெனரல் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த ‘கைவிரிப்பு’, நிமிஷா தண்டனை நிறைவேற்றத்தை ஏறக்குறைய உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.
அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கூறியது: ‘கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் இந்திய அரசாங்கம் எத்தனை தூரம் செல்ல இயலுமோ அதுவரை சென்று முயன்றுவிட்டது. உலகின் பிற நாடுகளைப்போல் அல்ல ஏமன். சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசி நிலைமையை இன்னும் சிக்கலானதாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஏமன் நாட்டின் நிலவரத்தைப் பொறுத்துப் பார்க்கையில் இதற்கும்மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்று அட்டர்னி ஜெனரல் கூறினார்.
அட்டர்னி ஜெனரல் வாதத்தைக் கேட்ட நீதிபதி சந்தீப் மேஹ்தா, “இந்தச் சம்பவம் நடந்த விதம்தான் மிகுந்த கவலையளிக்கிறது. ஒருவேளை அந்தப் பெண் உயிரை இழக்க நேர்ந்தால் அது வருத்தத்துக்குரியது” என்றார்.
அப்போது அட்டர்னி ஜெனரல், “நிமிஷாவின் தாயார் ஏமனில்தான் இருக்கிறார். நிமிஷாவை காப்பாற்ற ஒரு குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் ‘குருதிப் பணம்’ பேரத்தை முடிக்க அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதைக்கு நிமிஷாவுக்கான ஒரே வாய்ப்பு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்வது மட்டுமே” என்றார்.
அப்போது நீதிபதிகள், “நிமிஷா தரப்பினர் நம் அரசாங்கத்திடம் பணம் கேட்கவில்லை. அவர்களாகவே பணத்தை தயார் செய்துள்ளனர். பணத்தை வழங்குவதற்கான, சமரசம் பேசுவதற்கான தொடர்பை மட்டுமே ஏற்படுத்தித் தருமாறு இந்திய அரசை மனுதாரர்கள் கோருகின்றனர்” என்றனர்.
அதற்கு அட்டர்னி ஜெனரல், “ஏமன் மற்ற நாடுகளைவிட முற்றிலும் மாறுபட்ட களத்தைக் கொண்டுள்ளது. அங்குள்ள ஹவுத்திகள், தூதரக ரீதியாக அங்கீகரிக்கப்படாதவர்கள். அவர்கள் மூலம் நடைபெறும் இந்த சமரசப் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க தனிப்பட்ட முன்னெடுப்பு மட்டுமே. அதில் மற்ற நாடுகளுடன் ஏற்படுத்துவதுபோல் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக ஒத்துழைப்பை எல்லாம் ஏற்படுத்த இயலாது. அது மிகவும் சிக்கலானது.
இதற்கிடையில் நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அவை உறுதிப்படுத்தப்படவில்லை. அதை எவ்வளவு தூரம் நம்புவது என்றுகூட தெரியவில்லை. ஏனெனில் ஏமனில் என்ன நடக்கிறது என்பதை நாம் அரசுத் தரப்பிலிருந்து உறுதி செய்ய வாய்ப்பேதும் இல்லை” என்றார்.
வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூலை 18-க்கு ஒத்திவைத்ததோடு, அரசு வேறேதும் வழிமுறைகளைப் பின்பற்ற முயற்சிக்கும்படியும், ஏதேனும் நல்ல தகவல் இருந்தால் அதை நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டது.
நிமிஷா சர்ச்சை பின்னணி: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்டது.
தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கு முன்னர், செவிலியர் நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.8.60 கோடி குருதிப் பணம் தருவதற்கு அவரது குடும்பத்தார் முன்வந்துள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்ட சேவ் நிமிஷா பிரியா கவுன்சிலின் மூலம் இத்தொகை கிரவுட் ஃபண்டிங் முறையில் திரட்டப்பட்டுள்ளது.
ஷரியத் சட்டத்தின் கீழ் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு (குருதிப் பணம் / ப்ளட் மணி) செலுத்துவதன் மூலம் குற்றவாளி மன்னிக்கப்படலாம். குருதிப் பணம் என்பது முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலை வழக்குகளுக்கு, 100 ஒட்டகங்கள் போன்ற இழப்பீடுகளை வழங்கலாம் என்று இஸ்லாமியர்களின் இறைத் தூதர் முகமது நபியால் விளக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். குருதிப் பணம் என்ற ஒற்றை வாய்ப்பில் நிமிஷாவின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நிமிஷா வழக்கு இந்திய மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.