லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஆட்டம்.
நேற்று இந்திய பவுலர்கள் அற்புதமாக வீசி இங்கிலாந்தை 200 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் வீழ்த்திய அந்த 4 விக்கெட்டுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஹாரி புரூக் பெரிய அச்சுறுத்தல் இன்னிங்ஸை ஆடப்போவதாக மிரட்டினார். ஆகாஷ் தீப்பை டி20 பாணியில் விக்கெட் கீப்பர் பின்னால் இரண்டு ரேம்ப் ஷாட் ஆடி பவுண்டரிகள் அடித்ததோடு நேராக பெரிய சிக்ஸரையும் ஒரே ஓவரில் அடித்து இந்தியாவிடமிருந்து மேட்சை வெகு தூரம் கொண்டு சென்று விடுவாரோ என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
ஆனால், அப்போதுதான் ஷுப்மன் கில் ஒரு அபாரமான நகர்த்தலைச் செய்தார். ரேம்ப் ஷாட்டிற்காக லாங் லெக்கில் ஒரு பீல்டரை நிறுத்தி ஸ்கொயர் லெக் பவுண்டரியை காலியாக வைத்தார். இதில் சபலம் அடைந்த ஹாரி புரூக், தரையைத் தேய்த்துக் கொண்டு வந்த ஆகாஷ் தீப் பந்தை அராஜகமாக ஸ்பின் பந்தை ஆடுவது போல் ஸ்வீப் ஆட நினைத்து பவுல்டு ஆனார். கில்லின் மாஸ்டர் ஸ்ட்ரோக் இது.
முகமது சிராஜ் மீண்டும் அயராத விடாமுயற்சியே தன் பலம் என்பதை நிரூபித்தார். அவரது அபார ஸ்பெல்லில் அபாய பென் டக்கெட்டை தவறான புல் ஷாட் ஆடவைத்து மிட் ஆனில் கேட்ச் ஆக வைத்தார். அதே போல் ஆலி போப்பிற்கு தொடர்ந்து இன்ஸ்விங்கர்களை வீசி அவரை வீழ்த்தவே செய்தார். ஆனால் நடுவர் பிளம்ப் எல்.பி.க்கு கையை உயர்த்தவில்லை. சிராஜ் வற்புறுத்தலின் பேரில் டிஆர்எஸ் எடுத்தது இந்தியா. அது இந்திய அணிக்குச் சாதகமானது. பிறகு ஜோ ரூட்டைத் தடுமாற வைத்தார். 9 முறை தவறான ஷாட்களை ஆடவைத்தார்.
காலையில் பும்ராவை இப்போதைய பாஸ்பால் இங்கிலாந்து தன்னம்பிக்கையுடன் ஆட இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் என்பது போல்தான் இருந்தது. ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஜாக் கிராவ்லியெல்லாம் எவ்வளவு பலவீனமான உத்தி கொண்ட பேட்டர் என்பது புரிந்தது. மீண்டும் நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் விக்கெட் கீப்பர் முன்னால் நிற்க ஷுப்மன் கில்லின் அட்டகாசமான கல்லி நிறுத்தத்தால் ஆட்டமிழந்தார்.
ஜடேஜா தளர்வான பந்துகளை வீசவே இல்லை, டைட்டாக வைத்திருந்தார். வாஷிங்டன் சுந்தரின் டிரிஃப்டிற்கு இங்கிலாந்திடம் பதில் இல்லை. அதுவும் சுந்தர் எடுத்த 4 விக்கெட்டுமே பவுல்டு என்பது அவரது துல்லியப் பந்து வீச்சுக்கும் பேட்டர்களை ஏமாற்றி வீழ்த்தும் வித்தைக்கும் எடுத்துக்காட்டு. டிரிஃப்ட் பந்துக்கு அவுட் ஆனதில் ஜோ ரூட் முக்கிய விக்கெட். பந்து காற்றில் மேலே வரும்போது இந்த இடத்தில் தான் பிட்ச் ஆகும் என்று ஜோ ரூட் தவறாகக் கணித்து ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து ஸ்வீப் ஆட முயன்றார். ஆனால் பந்து சற்றே தள்ளி பிட்ச் ஆகித் திரும்பி ஸ்டம்பை பதம் பார்த்தது.
கேப்டன் கில்லின் அபாரமான உத்தியில் பவுலர்களின் சாதுரியமும் கைகொடுக்க இந்திய அணி, இங்கிலாந்தை 200 ரன்களுக்குள் சுருட்டி வெற்றி வாய்ப்பை உருவாக்கியது.
ஆனால்… ராகுல் செய்த தொடர் தவறுகள்: உருவான வாய்ப்பை முதன் முதலில் கெடுத்தவர் ஜெய்ஸ்வால். பேக் ஆஃப் லெந்த்தில் விழுந்த உண்மையில் லூஸ் பாலை தவறான ஷாட்டை ஆடப்போய் கொடியேற்றி ஆட்டமிழந்தார். அந்தப் பந்தை ஒன்று ஆடாமல் விட்டிருக்க வேண்டும் இல்லையா ஆஃப் திசையில் ஸ்லிப் தலைக்கும் மேல் தூக்கி விட்டிருக்கலாம். என்ன ஷாட் ஆடினார் என்பது அவருக்கும் தெரியவில்லை. நமக்கும் புரியவில்லை.
கருண் நாயர் ஃபுல் லெந்த் நேர் பந்துக்கு மட்டையைக் கொண்டு வராமல் பேடை நீட்டியது என்ன அனுபவமோ தெரியவில்லை. அனாவசியமாக அவர் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் ஹாஃப் காக் என்பார்களே ஃபுல் லெந்த் பந்துக்கு முன் காலை நீட்டிக் கொண்டு வரவும் இல்லை, இன் கட்டருக்குரிய பேக் அண்ட் அக்ராஸ் உத்தியும் அல்லாமல் அப்படியே காலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் மட்டையையும் தாமதமாகக் கீழிறக்க பந்து கால்காப்பைத் தாக்கியது.
நைட் வாட்ச்மேனாக வாஷிங்டன் சுந்தரை இறக்கியிருக்க வேண்டும், அதைவிடுத்து பிரஷர் சூழ்நிலையில் ஆகாஷ் தீப்பை இறக்கியது யார் ஐடியா என்பது தெரியவில்லை. சரி இறக்கப்பட்டார். ராகுல் என்ன செய்ய வேண்டும்? அவரை பேட்டிங் முனைக்கு வர விடாமல் தானே ஆடி அவரைப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால் ராகுல் இருமுறை சிங்கிள்கள் எடுத்து ஆகாஷ் தீப்பை பேட்டிங் முனைக்குக் கொண்டு வந்து திக் திக் கணங்களை உருவாக்கினார்.
அதுவும் நேற்றைய தினத்தின் கடைசி ஓவரை ஸ்டோக்ஸ் வீசும் போது ஸ்ட்ரைக் ராகுலிடம் தான் இருந்தது. அவரே அந்த ஓவரை முழுதும் ஆடாமல் கடைசி ஓவரும் அதுவுமாக பென் ஸ்டோக்ஸ் தீப்பொறி பறக்க வீசிக்கொண்டிருந்த போது முதல் பந்தில் சிங்கிள் எடுத்து ஆகாஷ் தீப்பை ஸ்ட்ரைக்கிற்கு வர வைத்தார். இதில் என்ன வேடிக்கை என்றால், ஆகாஷ் தீப் பவுல்டு ஆனது ஒரு விரயம் என்பதோடு ராகுலின் தன்னம்பிக்கை மீதும் ஐயம் எழுகிறது. தான் அவுட் ஆகிவிடுவோம் என்ற அச்சத்தினால்தான் ஆகாஷ் தீப்பை ஸ்ட்ரைக்கிற்குக் கொண்டு வந்து விட்டார் போலும்!
முதல் இன்னிங்ஸிலும் அப்படித்தான் தான் சதம் அடிக்க வேண்டுமென்பதற்காக ரிஷப் பண்ட்டை இல்லாத சிங்கிளுக்கு அழைத்து ரன் அவுட் ஆகச்செய்தார். பிற்பாடு இது தவறு என்று ராகுலே ஒப்புக் கொண்டார் என்றாலும் அதை வைத்துத் திருந்தவில்லை. தன் விக்கெட்டைப் பாதுகாக்க ஆகாஷ் தீப்பை பலி கொடுத்து அணியின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டார். இன்று அவர் நின்று வெற்றி பெறச் செய்யவில்லை எனில் இந்திய அணியின் தோல்விக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டிவரும்.