ஈஸ்ட் ரூதர்போர்ட்: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ரூதர்போர்ட் பகுதியில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது. முதல் 10 நிமிடங்களுக்கு பந்தை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது செல்சீ. அதன் பிறகே செல்சீ அணியின் பாக்ஸுக்குள் பந்தை கொண்டு சென்றது பிஎஸ்ஜி.
இந்நிலையில், செல்சீ அணியின் பால்மர் ஆட்டத்தின் 22 மற்றும் 30-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தினார். அவர் பதிவு செய்த இரண்டு கோலும் அபாரமானது. பிஎஸ்ஜி அணியின் தடுப்பை லாவகமாக ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளி இருந்தார். செல்சீ அணிக்காக 43-வது நிமிடத்தில் ஜோவா பெட்ரோ ஒரு கோல் பதிவு செய்தார். முதல் பாதி ஆட்டம் முடிந்த போது 3-0 என்ற கோல் கணக்கில் செல்சீ முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் பிஎஸ்ஜி அணி கோல் பதிவு செய்ய முயன்றது. ஆனால், அதை தடுத்தனர் செல்சீ அணி வீரர்கள். குறிப்பாக குர்குரே அந்தப் பணியை செல்சீ அணிக்காக சிறப்பாக செய்திருந்தார். அதே நேரத்தில் இரண்டாவது பாதியில் செல்சீ அணியின் இரு கோல் முயற்சியை பிஎஸ்ஜி அணியின் கோல் கீப்பர் தடுத்திருந்தார். ஆட்ட நேர முடிவில் 3-0 என செல்சீ வெற்றி பெற்றது.
பிஎஸ்ஜி அணியால் ஒரு கோல் கூட இதில் பதிவு செய்ய முடியவில்லை. செல்சீ அணியின் கோல் கீப்பர் அபார செயல்பாட்டை வெளிப்படுத்தி பிஎஸ்ஜி வீரர்களின் கோல் முயற்சியை தடுத்திருந்தார்.
இந்தப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் பார்த்து ரசித்தார். ஆட்டம் நிறைவடைந்த பிறகு களத்தில் செல்சீ அணி வீரர்கள் உடன் பிஎஸ்ஜி அணியின் கோல் கீப்பர் மற்றும் பயிற்சியாளர் என்ரிக்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தான் செல்சீ அணி வெற்றியை கொண்டாடியது.