சென்னை: உயர்கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்கும் ‘டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ அமைப்பின் சார்பில், மறைந்த கல்வியாளர் மு.அனந்த கிருஷ்ணன் 97-வது பிறந்தநாள் நினைவு சொற்பொழிவு மற்றும் கல்வி உதவித்தொகை விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலை.
வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 3 பழங்குடியின மாணவர்கள் உட்பட 4 பேருக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தொடர்ந்து, ‘உயர்கல்வியில் மறுசீரமைப்பு தேவை’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் தனி நபர் கல்வி, பொருளாதார வளர்ச்சியை பொருத்தது. உயர்கல்விதான் மக்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது. ஆனால், நாட்டில் உயர்கல்வி மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றுவிட்டது. அதை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
சுதந்திரம் பெற்றபோது, நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள், 496 கல்லூரிகள்தான் இருந்தன. தற்போது 1,362 பல்கலைக்கழகங்கள், 52,538 கல்லூரிகள் உள்ளன. ஆனால், உயர்கல்வி பயில்வோர் விகிதம் 29 சதவீதம் மட்டுமே. இதை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை அடைய உயர்கல்வியில் மறுசீரமைப்பு அவசியம். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் அதிகமாக உள்ளது.
உயர்கல்வியில் யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகளின் தலையீடு பெரிய பிரச்சினையாக உள்ளது. இவை அதிக அதிகாரம் செலுத்துகின்றன. ஆனால் குறைவான நிதியை ஒதுக்குகின்றன. அதேபோல, துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நியமிப்பது தேவையற்றது. தவிர, கடந்த சில நாட்களாகவே ஒற்றுமை என்ற பெயரில் மையப்படுத்துதலை நோக்கி நகர்த்தப்படுகிறோம். இது தவறு. கல்வியும், மருத்துவமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்த பிரச்சினை, பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்கள் இருப்பது. ஆங்கிலேயர் காலத்தில் அப்போது இருந்த 4 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்களை வேந்தர்களாக நியமித்தனர். சுதந்திரத்துக்கு பிறகு 20 ஆண்டுகள் வரை மத்திய, மாநில அரசுகள் காங்கிரஸ் அரசாக இருந்ததால் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால், சிக்கல்களும், அதிகார மோதல்களும் ஏற்பட்டன. பல்கலைக்கழக வேந்தராக மாநில கல்வி அமைச்சர்கள்தான் இருக்க வேண்டும் அல்லது அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.