சென்னை: ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார். 4 கார்களும் சேதம் அடைந்தன. அரும்பாக்கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரியாணி கடை வழியாக நேற்று காலை 6.10 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தை தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்பவர் ஓட்டினார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டீரிங்கிலேயே மயங்கி சாய்ந்தார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் இடதுபுறம் நடந்து சென்று கொண்டிருந்த சேப்பாக்கம், லால் முகமது தெருவைச் சேர்ந்த சசிகுமார் (63) என்பவர் மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மேலும் மற்றொரு பாதசாரி மீதும் மோதியது. இதில் அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதோடு மட்டுமல்லாமல் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த 4 கார்கள் மீதும் அடுத்தடுத்து மோதி சேதத்தை ஏற்படுத்திவிட்டு நின்றது. விபத்தை ஏற்படுத்திய பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் பயத்தில் கூக்குரல் எழுப்பினர்.
பின்னர், மாரடைப்பு ஏற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநரை பேருந்து நடத்துநர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேருந்து ஓட்டுநர் வேலுமணி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.