புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள முக்கிய தீவிரவாத முகாம்களை அழித்தது.
அதன் பிறகு முதல் முறையாக நாடாளுமன்றம் கூடுவதால் அது குறித்தும், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீடு குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் பிரச்சினையை எழுப்பும் என்று தெரிகிறது. முன்னர் திட்டமிட்டதை விட ஒரு வாரம் அதிகமாக மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணுசக்தித் துறையில் தனியார்துறை நுழைவதை எளிதாக்குவது உட்பட பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உத்தியை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியாவின் இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதனிடையே, மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ஜூலை 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.